பரீட்சையில் தோல்வியடைந்த மகனுக்கு தந்தையின் அறிவுரை!


நீ தோல்வியடைந்த மனவிரக்தியில் இருப்பாயானால் அதிலிருந்து மீட்டு எடுக்க வேண்டிய முதற் கடப்பாடு என்னையே சாரும்.

Posted on:
2017-04-01 05:20:08

எல்லா பாடங்களுக்கும் F எடுத்து தோல்வியடைந்த மகனுக்கு தந்தை கொடுக்கும் பதில் இதோ!! 

 மகனே நீ எந்த ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை என்பதையிட்டு நான் வருத்தப் படவோ அல்லது உன்னை கடிந்து திட்டித் தீர்க்கவோ இல்லை,உன்னால் முடிந்ததை நீ செய்தாய் ,
நீ தோல்வியடைந்த மனவிரக்தியில் இருப்பாயானால் அதிலிருந்து மீட்டு எடுக்க வேண்டிய முதற் கடப்பாடு என்னையே சாரும். தயவு செய்து உன் தோல்வியில் மனமுடைந்தோ அல்லது மற்றவர்களின் கொண்டாட்டத் தைப் பார்த்து தயக்கமோ அடையாதே , ஏனெனில் வெற்றி பெற்றவர்களின் பின்னே தான் இந்த உலகமே நிற்கும் , தோல்வி அடைத்தவர்களை உதறித்தள்ளும் ஆனால் தோல்வி அடைந்தவர்கள் தான் வாழ்கையில் அதிகம் வெற்றி பெறுகிறார்கள் என்ற உண்மை உனக்குப் புரிவதோடு வெற்றிக்காக நீ உழைக்கத் தொடங்க வேண்டும் .ஆண்டவன் கூட பிறப்பிலேயே சிலருக்கு அறிவை நிறையக் கொடுத்து மற்றவர்களை சோதிக்கிறான், கல்வி அறிவு நிறையப் பெற்றவர்களெல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெர்றவர்களல்ல , வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அறிவும் , வழியும் அனுபவங்களும் முற்றிலும் வேறானவை. ஓடம் கவிழ்ந்த பொழுது நீந்தத் தெரியாத மிகப் பெரும் கல்விமான் மூழ்கி இறந்து விடுகிறான் , நீச்சல் தெரிந்த பாமரன் பிழைத்து விடுகிறான்.

கல்வியறிவு எதுவும் இல்லாது ஏன் எழுதப் படிக்கக் கூடத் தெரியாத நான் மிகவும் உயர்ந்த கல்வி கற்றவர்களுக்கு நிகரான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லையா ,ஏன் எவரிடமும் கையேந்தி நிற்காமல் எனது சிறு தொழில் நிறுவனத்தினைத் தொடங்கி நடத்தவில்லையா, மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவில்லையா , முடிந்தளவு ஏழைகள் மற்றும் வேண்டப்பட்டோருக்கு உதவவில்லையா, வங்கிகள் மற்றைய நிறுவனகளுடன் நான் கொடுக்கல் வாங்கல் செய்யும் அறிவு எங்கிருந்து வந்தது, இவை எனது அனுபவக் கல்வியால் வந்தவை.
நீயும் உனது வாழ்க்கையை நீயே செதுக்கிக் கொள் ,எங்கள் கல்வி முறைமையும் பரீட்சை முறைமையும் உனக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரப் பொருத்தமானதாக இல்லை என்பதைப் புரிந்து கொள் , கல்வியிலே உச்சம் பெற்ற பட்டதாரி மாணவர்கள் வேலை கேட்டு வீதிக்கிறங்கி போராடும் நிலைக்கு தள்ளியது தான் எங்கள் கல்வி முறை , கடவுள் ஒவ்வொருவருக்கும் பிறப்பிலேயே ஏதோ ஒரு தகமையைக் கொடுத்துள்ளான், அது எது எனக் கண்டு பிடி , அதில் உனது கடின உழைப்பைச் செலுத்து தன் நம்பிக்கையையும் நேர்மையையும் உனது மூலதனமாகக் கொள் , நீயே உனது சொந்தக் காலில் மற்றவர்களுக்குக் கையேந்தாமல் ஒரு தொழிலைக் கற்றுக்கொள் , ஏன் கற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பைக் கொடுக்குமளவுக்குக் கூட நீ முன்னேற முடியும்.

(தோல்வியடைந்தவர்களுக்கு ஆறுதலாகவும் தன்னமிக்கையாகவும் இருக்க ஒரு பதிவு வேண்டும் எனும் நோக்கில் எழுதப்பட்டது நன்றி.)
-
- அருளானந்தன் பொன்னையா -